Friday, June 17, 2011

தமிழியல் ஆய்வுத் துறையை செழுமைப்படுத்திய பேரறிஞர் சிவத்தம்பி


இலக்கிய விமர்சனம் இவை பற்றிய வரலாறுகள் எழுதப் படும் போது பேராசிரியரின் பங்களிப்புக்கு அவற்றில் கணிசமான இடமுண்டு. தமிழியல், தமிழ் இலக்கணம், இலக்கியம், விமர்சனம் என்று வரம்புக்குட்பட்ட துறைகளை, அவ்வரம்புக்குள் நின்று மட்டும் நோக்காது வரலாறு அரசியல், பொருளியல், சமூகவியல், மானிடவியல் எனினும் பல்வேறு புலமை சார் துறைகளின் பின் புலத்தில் நின்று, தமிழிலக்கிய வளர்ச்சியை நோக்கிய தமிழியல் ஆய்வுக்கு ஒரு பன்னெறி ஆய்வு கலாசார அணுகுமுறையைப் பயன்படுத்தி, அவ்வாய்வுத் துறையைச் செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், பண்டிதரும், சைவப் புலவருமான ஆசிரியர் பொ. கார்த்திகேசு, வள்ளியம்மைக்கும், 10.05.1932 மகனாகப் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்து உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்ற பின் சில காலம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன் பின்னர் பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய காலத்திலே வித்தியோத யப் பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளராக 1965ம் ஆண்டு தனது சேவையை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று மூத்த பேராசிரியராக (Senior Prof.)1994ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை கடமை புரிந்து பல் துறைகளிலும் ஆய்வுகள் செய்துள்ளார்.
பெர்மிங்காம் (Birmingham)  பல்கலைக்கழகத்தில் (Phd)  பேராசிரியர் தொம்சனின் கீழ் “Drama in Ancient Tamil Society”என்ற தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தஞ்சை பல்கலைக் கழகம், ஸ்கண்டினேவியா பல்கலைக் கழகம், உப்சலா பல்கலைக் கழகம், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா, பெர்கினி, விஸ்கான்ஸியன், ஹாவார்ட் பல்கலைக் கழகங்களில் வருகை தரு பேராசியராக பணியாற்றியுள்ளார்.
கொழும்பு, ஸாகிரா கல்லூரியில் இருக்கும் போதே சிவத்தம்பி அவர்கள் இலங்கை வானொலியின் நாடகங்களில் நடித்துள்ளார். இதில் ‘விதானையார் வீடு’ என்ற தொடர் நாடகத்தில் நகைச்சுவை மிகுந்த பாத்திரங்களில் நடித்து நேயர்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஏராளமான நாடகங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்நாடகங்களில் முக்கியமானது உடையார் மிடுக்கு’ என்ற வானொலி நாடகமாகும். பல்கலைக் கழகங்களில் நாடகமும் அரங்கியலும் என்ற பட்டப் படிப்பு பாடநெறியினை அறிமுகம் செய்து நாடக ஆய்வு பாரம்பரியம் ஒன்றினை உருவாக்கினார்.
இவர் இது வரை வெளியிட்ட நூல்கள் பல. இவற்றை எல்லாம் இங்கு பட்டியலிட இடம் காணாது. இருந்தும் சுருங்க கூறினால் இலங்கையிலும், இந்தியாவிலும் சுமார் 60க்கு மேற்பட்ட நூல் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் வெளிவந்துள்ளன.
ஈழத் தமிழ் இலக்கியத்தின் திரும்புமுனையாக அமைந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மரபுப் போராட்டம் ஆகியவற்றில் பேராசிரியர் கைலாசபதியுடன் இணைந்து இவர் ஆற்றிய பணி மகத்தானது. மார்க்சிய ஒளியில் தமது விமர்சனப் பார்வையைச் செலுத்தும் பேராசிரியர் தமிழ் விமர்சனத் துறையிலும் பல புதிய கோணங்க ளுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர்.
தமிழ் மொழி மாநாடு உலகில் எங்கு நடந்தாலும் அங்கு பேராசிரியரின் பங்களிப்பு இருக்கும் அதற்கு உதாரணமாக 2010 தமிழ்நாடு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் சிறப்பு சொற்பொழிவாளராக எமது பேராசிரியர் கா. சிவத்தம்பியை அழைத்தது எமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விடயமாகும்.
அண்மையில் கொழும்பில் (2011 ஜனவரி) சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கும் தகுந்த ஆலோசனை வழங்கி வழி நடத்தியதுடன் சிறப்பு சொற்பொழி வாளராக கலந்துகொண்டு காத்திரமான ஒரு சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.
பொதுவாக பேராசிரியர்கள் என்றால் தமது துறை சார்ந்த ஒரு கூறினை ஆய்வு செய்து அத்துறையில் அறிஞர்களாக இருப்பார்கள். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களோ தமது பல்துறைச் சங்கம் ஆய்வு (Multi Disciplinary Apporach)காரணமாக பல்வேறு துறைகளில் இயங்கிப் புகழ்பூத்த பன்முக ஆளுமையாளராகத் திகழ்கின்றார்.
இன்று பல்கலைக் கழகங்களில் உள்ளோரும், ஏனையோரும் தமக்கு ஏற்படும் புலமைசார் சந்தேகங்களுக்குத் தீர்வுகாணப் பேராசிரியரைச் சந்தித்தோ அல்லது அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ ஆலோசனை பெறுகின்றனர். எவருக்கும் எவ்வேளையிலும் அறிவை வழங்கும் அட்சய பாத்திரமாக அவர் திகழ்கிறார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ஆற்றிய பணிகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் தமிழக அரசின் அதியுயர் விருதான ‘திரு. வி. க. விருது’ பெருமை மிக்கது. இவ்விருதினைப் பெற்ற ஒரே இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் மட்டுமே.
கடந்த வருடம் கொடகே புத்தக நிறுவனம் இவருக்கு வாழ்நாள் சாதனையார் விருது வழங்கி கெளரவம் செய்தது.
இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து தமிழ் இலக்கியத்தின் மூலம் ஊடாட்டம் கொள்கிறோம் என்ற பெருமை கொள்ள வைக்கிறது.

No comments:

Post a Comment