இலங்கையில் தனியார் பல்கலைக் கழகங்கள் அவசியமா?



"எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு"
     கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றி அமையாத ஒன்று. இலங்கையை பொறுத்த வரையில்இது கல்வி தரத்தில் உயர் நிலை வகிக்கும் நாடு. விருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக இலங்கையின் கல்வி அறிவு வீதம் காணப்பட நாட்டின் இலவச கல்வியே பிரதான காரணம். இலவச கல்வியானது நாட்டின் தேசிய தலைவர்களின் முனைப்பான தொடர்போராட்டங்களின் விளைவாக நடைமுறைக்கு வந்தது. இங்கு, c.w.w.கன்னங்கரா விதந்து குறிப்பிட வேண்டியவர். இதன் விளைவாக 1947 களின் பின் நாம் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வியை பெற முடிந்தமை நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். இக் கல்வி முறை உலகளாவிய ரீதியில் தனித்துவம் மிக்கது.  இலங்கை உயர் கல்வி அறிவு வீதம் கொண்ட நாடாக இருந்த போதிலும் அதன் கல்வி தரம் சர்வதேச நாடுகளுக்கு நிகராக இல்லை எனவும்நடைமுறைக்கு பொருத்தம் குறைந்த கல்வி எனவும் சில கருத்து நிலைகள் உலா வருகின்றன. இலங்கையை பொறுத்த வரை பெருமளவில் தரமான கல்வி அரசினால் மட்டுமே வழங்கப் பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதில் அரசு பெரும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்து நிலைகள் பல தரப்பினரிடையேயும் நிலவுகின்றது. எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை இலங்கையின் கல்வி புலத்தில் எவ்வாறான மாறுதலை உண்டு பண்ணும் என்பதனை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
              அந்த வகையில் பலர் இதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இதற்கு எதிராக அரச பல்கலைக்கழக மாணவர்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னின்று நடாத்தி வருகின்றனர். இவர்கள் தமது போராட்டத்துக்கான வலுவான பல காரணங்களை முன் வைத்த போதிலும் இவர்களுகெதிராக பல குற்றச்சாட்டுகள் சமூகத்தில் நிலவுகிறது. உண்மையில் இவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற தவறிய மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க தயார் அற்றவர்களாகவும்தாங்கள் மட்டும் பட்டதாரிகளாக வெளியேற வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களாகவும் உள்ளனர் எனவும் தனியார் பல்கலைக்கழகங்களுடன் போட்டி போட தயங்குகின்றனர் எனவும் பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் இலங்கையை பொறுத்தவரை பெரிய அளவில் வேலை இல்லா திண்டாடம் நிகழ்வதால் தனியாரின் உள்நுழைவு மேலும் நிலைமையை மோசமடைய செய்யும் என்பது அரச பல்கலைக்கழக மாணவர்களின் கருத்து. மேலும்தனியார் பல்கலைக் கழகங்கள் கல்வியை வியாபாரமாக மாற்ற கூடும் எனவும் இதனால் தகுதியானோர் வேலை அற்று இருக்க தகுதி அற்றோர் தொழில் வாய்ப்பை பெரும் துர்பாக்கிய நிலை தோன்றலாம் எனவும் இவர்கள் அஞ்சுகின்றனர். 
          இலங்கையில் தனியார் பல்கலை கழகங்கள் ஆரம்பிப்பதால் சாதக பாதக நிலைகள் இரண்டுமே உண்டு என்பது தெளிவான உண்மை. முதலில் சாதக நிலையை ஆராய்வோமேயாயின் பெருமளவான எமது நாட்டின் செல்வம் வெளி நாடுகளை சென்றடையாது பாதுகாக்க முடியும். ஏனெனில் பெருமளவான மாணவர்கள் வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களை நாடிச் செல்கின்றனர். இதன்காரணமாக பெருந்தொகைப் பணம் வெளிநாடுகளுக்குப் போய்ச் சேருகிறது. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்பு அடைகிறது. மேலும் இலங்கையில் மிக குறைந்த சதவீதத்தினர் மட்டுமே பல்கலை கல்வியை தொடர முடிவதால் வாய்ப்பை பெற முடியாத அதிக இளையவர்கள் அதிகளவில் வெளியேறுவதால் கால போக்கிலே முதியோர் குடித்தொகை பிரச்சினைவெளிநாட்டில் இருந்து தொழிலாளரை இறக்குமதி செய்ய வேண்டி நேரிடலாம். வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் அளவுக்கு வசதி அற்றவர்கள் மனநிலை பாதிப்படையவும்சமுக புறமொதுக்கலுக்கு ஆளாகவும் நேரிடலாம். இவர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோராகவே இருந்து பொருளாதாரத்தில் பாரிய பின் விளைவை உண்டு பண்ணுவர்தனியார் பல்கலை கழகமானது,இங்கேயே மாணவர்கள் குறைந்த செலவுடன் தமது கல்வியை தொடரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். அத்துடன் சில பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாடுக்கு அனுப்பி படிப்பிப்பதை விரும்புவதில்லை.இதனால் அவர்கள் கல்வி வாய்ப்பை இழக்க வேண்டி ஏற்படும். ஆனால் தனியார் பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப் படுமானால் இப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிட்டும். அத்துடன் வெளிநாடு மாணவர்கள் பலரை உள்வாங்குவதன் மூலம் அந்நிய செலாவணியை பெற்று நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்லலாம்.
              இதுதவிர இலங்கை கல்விமுறையில் தரப்படுத்தல் நடைமுறையில் உள்ளது. இது பெருமளவான மாணவர்களுக்கு பாதிப்பை உருவாக்குகிறது. உதாரணமாக எடுத்து நோக்குவோமானால் யாழ் மாவட்டத்தை பொறுத்த அளவில் எல்லா இடங்களில்லும் சமமான கல்வி வாய்ப்புவசதிகள் கிடைப்பதில்லை. ஆனால் அனைவருக்கும் ஒரே வெட்டுப் புள்ளியே வழங்கப் படுகிறது. இங்கு பின்தங்கிய பிரதேசத்தில் குறைந்த வசதியுடன் கல்வி கற்கும் ஒரு மாணவனைக் காட்டிலும் வேறு மாவட்டத்தில் இதை விட நன்கு வசதியுடன் கல்வி கற்கும் மாணவனுக்கு பல சந்தர்ப்பங்களில் குறைந்த வெட்டுப் புள்ளியுடன் பல்கலைக் கழக அனுமதி கிடைக்கிறது. இது மிகவும் தவறான முறைமை. ஆனால் இங்கு தனியார் பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப் படுமிடத்து இவ்வாறான திறமையான மாணவர்கள் பெருமளவில் பயன் பெறுவார்கள். இவர்களின் எதிர் கால வாழ்வும் பிரகாசமாக மாறும்.

         எதற்கெடுத்தாலும் முதலாளிதுவ அறிவுஜீவிகள்தனியார்மயம் தான் சரியென்று வாதிடுவார்கள். அவர்கள்கல்வி தனியார்மையம் ஆவதையும் சரியென்று வாதிடுவார்கள். அவர்களின் வாதங்களின் நியாய தன்மை அவர்களுக்கே தெரியும். எம் நாட்டைப் பொறுத்தளவில் வேலையில்லா பிரச்சனை ஒரு பாரிய பிரச்சனையாக உள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் புற்றீசல் போல் தனியார் கல்லூரிகளை திறக்க வேண்டும்தனியார் நுழைந்தால் தான் தரம் என்று சொல்லும் முதலாளிதுவ அறிவுஜீவிகளேஏன் தனியார் கல்லுரிகளால் தரமானவேலை கிடைக்க கூடிய கல்வி கொடுக்க முடியவில்லைஏனென்றால்கல்வி கட்டணகொள்ளை தான் கல்வி தனியார் மயம் ஆவதின் முக்கிய நோக்கம். அதைவிட்டுதனியார் என்றால் தரம் என்று சொல்லுவது மிகப்பெரிய பொய் மட்டுமே. தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதானது இலவசக் கல்வியின் சிறப்பினை இல்லாது செய்துவிடும் என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது. தவிரபல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தினைப் பேண முடியாத நிலைமையினை இது தோற்றுவிக்கும் என்றும் இந்த முடிவினை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.
                                      இலங்கையை பொறுத்தவரை தரமான தொழில் கல்வியை சர்வதேசத்திற்கு நிகராக வழங்குதல்,தரப்படுத்தல் முறையில் மாற்றம் கொண்டு வருதல்பல்கலை மாணவருக்கு தொழில் வாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு விரைந்து செயற்படுத்தும் ஆயின் அது அனைவர்க்கும் வரபிரசாதமாக அமையும் என்பது எனது வாதம். 
                              எது எவ்வாறு இருப்பினும் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி மிக அவசியம். அது எங்கிருந்து கிடைக்கின்றது என்பது தேவையற்ற ஒன்று. வழங்கப்படும் கல்வியானது தரமாகவும் குறைந்த கட்டணத்திலும் இருக்கும் பட்சத்தில் நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். அத்துடன் வெளிநாட்டவர்களை உயர் பதவிகளில் நியமிப்பதை விடுத்து எம்மவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோமேயானால் கல்வி கற்கும் அனைவர்க்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். எமது நாடும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.