கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு: System Sweeper

இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது.இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த வலையமைப்பிற்குள்  மால்வேர் வைரஸ் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் வைரஸ்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன. எனவே  நமது கணணியைப் பாதுகாப்பாக இந்த  வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.
பொதுவாக  ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் இலவசமாகவும் பயன்படுத்தலாம். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன. இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட்  தன் வாடிக்கையாளர் மையத்திற்கு கெடுதல் விளைவிக்கும் மென்பொருள்கள்  (Malware Programs) குறித்து வரும் புகார்கள், பிரச்சினைக்கான தீர்வுகள் கேட்டு வரும் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்க  தற்போது புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper. இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாதவர்கள், ஆண்ட்டி வைரஸ் மென்பொருளைத் தங்கள் கணனிகளில் தரவிறக்கம்  செய்ய முடியாதவர்கள், இணையத்தள வசதிகள் இல்லாததனால், வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை புதுப்பிக்க  முடியாதவர்கள்  இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.  மேலும் தரவிறக்கம்  செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்  செயல்பட முடியாமல் முடக்கப்படும் நிலையிலும் இதனைப் பயன்படுத்தலாம். இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கு இணையாகச் செயல்பட்டாலும், அதற்குப் பதிலாக அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம்.

பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும்.உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்டோஸ் 32 மற்றும் 64 Bit   வகைகளுக்கெனத் தனித்தனியே தரப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் தங்களின் கணனியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற் கேற்ற வகையில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.